குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை: '25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம்' - தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கருத்து

குஜராத்துக்கு எதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம் என்று தோல்விக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
Rohit Sharma (image courtesy: IPL twitter via ANI)
Rohit Sharma (image courtesy: IPL twitter via ANI)
Published on

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 18.2 ஓவர்களில் 171 ரன்னில் அடங்கி 3-வது இடத்துடன் திருப்தி கண்டது. 60 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 129 ரன்கள் குவித்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் 3 சதம், 5 அரைசதம் உள்பட மொத்தம் 851 ரன்கள் (16 ஆட்டம்) குவித்து அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய சுப்மன் கில் 'பிளே-ஆப்' சுற்று ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், 'குஜராத் அணி அபாரமான ஸ்கோரை எடுத்தது. சுப்மன் கில் அருமையாக பேட்டிங் செய்தார். ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தது. நாங்கள் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கும் போது இலக்கை எட்டிப்பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் இருந்தோம். கேமரூன் கிரீன், சூர்யகுமார் நன்றாக பேட்டிங் செய்தனர். ஆனால் எங்களால் போதிய பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை உருவாக்க முடியவில்லை. எனவே நாங்கள் வெற்றிக்கான வழியை தவற விட்டோம்.

'பவர்பிளே'யில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கு இதுபோன்ற பெரிய இலக்கை விரட்டுவதற்கு தேவையான உத்வேகம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் போன்று எங்கள் அணியிலும் ஒரு வீரர் கடைசி வரை நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அப்படி எங்கள் வீரர் ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி இருந்தால் இந்த ஆட்டத்தில் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அத்துடன் மைதானத்தின் ஒருபக்கத்தில் பவுண்டரி அளவும் குறைவாகும்.

இஷான் கிஷன் ஆடமுடியாமல் போனது எதிர்பாராத ஒன்றாகும். திடீரென அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறக்கூடிய அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த ஒரு ஆட்டத்தை வைத்து எங்கள் வீரர்களின் திறமையை மதிப்பிடமாட்டேன். குஜராத் அணி நன்றாக விளையாடியது சுப்மன் கில்லின் ஆட்டம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அவர் இந்த சிறப்பான பார்மை தொடருவார் என்று நம்புகிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com