இப்படி ஒரு ரன் அவுட்டை மிஸ் பண்ணலாமா? - சிக்கந்தர் ராசாவின் தவறால் தப்பிய பாப் - வைரல்

ஷார்ஜா அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
சிக்கந்தர் ராசா
Published on: 

ஷார்ஜா,

சர்வதேச லீக் டி20 தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஷார்ஜா வாரியர்ஸின் சிக்கந்தர் ராசா எளிதான ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்ட சம்பவம் கவனம் பெற்றது.

தப்பிய பாப்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேபிடல்ஸ் அணியின் 7-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது.

மேக்ஸ் ஹோல்டன் அடித்த பந்தை பிராண்டன் மெக்முல்லன் தடுத்தார். உடனே பந்தை பந்துவீச்சாளர் இருக்கும் முனையை நோக்கி வீசினார். அப்போது எதிர்முனையில் இருந்த பாப் டு பிளெசிஸ், பாதி ஆடுகளத்தைக் கடந்து ஓடி வந்திருந்தார்.

இதனால் ரன் அவுட்டாக்கும் வாய்ப்பு ஷார்ஜா அணிக்கு இருந்தது. ஆனால், மெக்முல்லன் வீசிய பந்தை சிக்கந்தர் ராசா, தவறவிட்டார். அதேசமயம் பாப் கிரீஸை விட்டு வெளியே இருந்தார். ஆனால், இதை கவனிக்காத ராசா, பந்தை எடுத்து செல்ல ஆரம்பித்தார். பின்னர் பாப் கிரீஸை விட்டு வெளியே இருப்பதை உணர்ந்து ஸ்டம்புகளை தட்டினார்.

ஆனால், அதற்குள் பாப் தனது பேட்டை கிரீஸுக்குள் வைத்துவிட்டதால், ரன் அவுட் ஆவதிலிருந்து தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

எனினும், அடுத்த ஓவரிலேயே சிக்கந்தர் ராசா பாப் டு பிளெசிஸை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

126 ரன்களில் சுருண்ட துபாய் கேபிடல்ஸ்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேபிடல்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கரீம் ஜனத் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 23 ரன்கள் சேர்த்தார்.

ஷார்ஜா அணியின் சார்பில் ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே மற்றும் ரிச்சர்ட் க்ளீசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிக்கந்தர் ராசா ஒரு விக்கெட் எடுத்தார்.

13 ஓவர்களில் இலக்கை எட்டிய ஷார்ஜா

இதையடுத்து 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு டிம் செய்பர்ட், பால் வால்டர் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். செய்பர்ட் 20 பந்துகளில் 41 ரன்களும், வால்டர் 25 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஷார்ஜா அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

X