'வெற்றிகளை குவித்தாலும் பணிவுடன் இருக்க வேண்டியது அவசியம்' - ஸ்ரேயாஸ் அய்யர்

ஐ.பி.எல். போன்ற தொடரில் விளையாடும்போது எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 272 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்.-ல் ஒரு அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவுக்கு இது 'ஹாட்ரிக்' வெற்றியாகும். ஒரு சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் 3 ஆட்டங்களை வெற்றியோடு தொடங்குவது இதுவே முதல் முறையாகும். வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

"ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனை ஸ்கோரான 277-ஐ தாண்டுவது குறித்து நினைக்கவில்லை. இன்னிங்சை தொடங்கிய விதத்தை பார்த்தபோது 210- 220 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தேன். ஆனால் 272 ரன்னை எட்டியது இரட்டிப்பு மகிழ்ச்சி.

'பவர்-பிளே' யில் சுனில் நரின் அதிரடியாக விளையாட முடியாவிட்டால், அதன்பிறகு வரும் பேட்ஸ்மேன்கள் அப்பணியை செய்ய வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. ரகுவன்ஷி சூழலை நன்கு புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்தார். பவுலர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பொறுப்பை எடுத்து கொண்டு பந்து வீசினர்.

'இம்பேக்ட்' பந்து வீச்சாளராக இறங்கிய வைபவ் ஆரோரா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து உதவினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் ஐ.பி.எல். போன்ற தொடரில் விளையாடும்போது எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்."

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com