

லண்டன்,
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், தென் ஆப்பிரிக்க அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவால் எந்த நெருக்கடியையும் தரமுடியவில்லை. பேட்டிங், பவுலிங் என மொத்தமாக சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
பலம் வாய்ந்த அணியாக வலம் வருவதும் ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில், மண்ணைக்கவ்வுவதும் தென் ஆப்பிரிக்க அணிக்கு வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இதனால் ஜேக்கர்ஸ் என தென் ஆப்பிரிக்க அணியை கிரிகெட் விமர்சகர்கள் விமர்சனம் செய்கின்றனர். நேற்றைய போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸிடம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த டி வில்லியர்ஸ், தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் நீடிக்க இருப்பதாகவும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை வெற்றிக்கு பாடுபட போவதாகவும் தெரிவித்தார்.