‘நான் எந்திரம் அல்ல; எனக்கும் ஓய்வு தேவை’-கோலி

‘நான் எந்திரம் அல்ல; எனக்கும் ஓய்வு தேவை’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
‘நான் எந்திரம் அல்ல; எனக்கும் ஓய்வு தேவை’-கோலி
Published on

கொல்கத்தா,

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், அண்மையில் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவது உற்சாகம் அளிக்கிறது. டெஸ்ட் போட்டி இன்னொரு வித்தியாசமான சவால். முதல் போட்டியில் இருந்தே வலிமையான உத்வேகத்தை உருவாக்கி, அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. இதில் நாங்கள் பாகுபாடுகாட்டமாட்டோம். எதிரணி யாராக இருந்தாலும் வெற்றி மட்டுமே எங்களது குறிக்கோள். எத்தகைய சூழல் நிலவினாலும் ஒரு அணியாக நன்றாக செயல்பட வேண்டும் அவ்வளவு தான் என்றார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் மூன்று டெஸ்ட் போட்டியும் முடிந்த பிறகே அது பற்றி யோசிப்போம் என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருந்தார். இது குறித்து கோலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு மட்டும் ஓய்வு வேண்டாமா? எனக்கும் ஓய்வு தேவை தான். எனது உடலுக்கு எப்போது ஓய்வு தேவை என்று உணர்கிறனோ அப்போது ஓய்வு கேட்பேன். நான் ஒன்றும் எந்திரம் கிடையாது. எனது தோலை சீவி பார்த்தாலும் ரத்தம் தான் வரும்.

வீரர்களுக்கு போதிய அளவு ஓய்வு அவசியம். யார்-யார் களத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து, அதற்கு ஏற்ப அணி நிர்வாகம் ஓய்வு அளிக்க வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை 20 முதல் 25 வீரர்கள் களம் இறங்க தயாராக உள்ளனர். இருப்பினும் முக்கியமான தருணத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாது என்றார்.

கொல்கத்தா ஆடுகளம் தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயாராவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கோலி, கடும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஆடுகளம் இருப்பது போல் தெரிகிறது. நிறைய புற்கள் இருக்கிறது. இங்கு விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். நமக்கு தகுந்தபடி உள்ள சூழலில் விளையாடுவதை மட்டும் நாங்கள் விரும்பவில்லை. எந்த ஒரு சீதோஷ்ண நிலையிலும் எங்களது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறோம். கடினமான சூழல் நிலவினாலும், அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகின் நம்பர் ஒன் அணியாக நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்றால், உலகின் எந்த இடங்களில் விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும். என்றார்.

இரு அணிகள் இடையே அடிக்கடி போட்டிகளை நடத்தும் போது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். ரசிகர்கள் தொடர்ந்து போட்டிகளை உற்சாகமாக ரசிக்க வேண்டும். அதே நேரத்தில் வீரர்களும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். போட்டியும் பரபரப்பாக அமைய வேண்டும். இதில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது. வருங்காலத்தில் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோலி வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com