எனது பந்துவீச்சில் நான் இன்னும் திருப்தியடையவில்லை - அன்ஷுல் கம்போஜ்

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கட் களமிறங்கினர். இந்திய பந்து வீச்சை சர்வ சாதாரணமாக நொறுக்கிய பென் டக்கட்டும், ஜாக் கிராவ்லியும் துரிதமாக ரன் திரட்டினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் (100 பந்து, 13 பவுண்டரி) அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். இது அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் (20ரன்), ஜோ ரூட் (11 ரன்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக அன்ஷுல் கம்போஜ் கூறியுள்ளார். இருப்பினும் தனது பந்துவீச்சில் இன்னும் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதேபோன்று போட்டியின் ஆரம்பத்தில் நல்ல இடங்களில் பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் ஆரம்பத்திலிருந்தே எனது திட்டம். சில பந்துகள் நன்றாக விழுந்தன, சில பந்துகள் வரவில்லை. நேர்மையாகச் சொன்னால், எனது பந்துவீச்சில் நான் இன்னும் முழுமையாக திருப்தி அடையவில்லை. நாளை (அதாவது இன்று) நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.
போட்டியின் முதல் இரண்டு ஸ்பெல்களில் நான் கொஞ்சம் அதிகமாக முயற்சித்தேன். ஆனால் மூன்றாவது ஸ்பெல்லில்தான் என்னுடைய பலம் என்னவோ அதில் கவனத்தை செலுத்தி பந்து வீசினேன். அப்போதுதான் எனக்கு முதல் விக்கெட் கிடைத்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இன்னும் சிறப்பாக பந்து வீசுவோம் என்று நினைக்கிறேன். பவுண்டரிகளை கட்டுப்படுத்துவதே முக்கியமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் சிங்கிள் ரன்கள் எடுப்பதை விட பவுண்டரிகளை அடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்" என கூறினார்.






