புஜாரா மாதிரி என்னால் ஆட முடியாது...ஆக்ரோஷமான பேட்டிங் தான் என்னுடைய அணுகுமுறை - இந்திய இளம் வீரர் பேச்சு

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

மும்பை,

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார். அதற்கு முக்கிய காரணமே அவரது அதிரடியான அணுகுமுறை தான்.

எந்த ஓவராக இருந்தாலும் எந்த பந்தாக இருந்தாலும் ஷார்ட் பிட்ச் வீசினால் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதே பவுலர்களின் மனநிலையாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதிரடியாக விளையாட நினைத்து தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்து வருகிறார்.

இந்நிலையில் தான் எப்போதும் தடுப்பாட்டத்தை கையில் எடுக்கப்போவதில்லை என்றும் என்னுடைய அதிரடியான ஆட்டத்தை இனிமேலும் தொடர்வேன் என பிரித்வி ஷா தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தனிப்பட்ட முறையில் நான் என்னுடைய ஆட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். புஜாரா சார் மாதிரி பேட்டிங் செய்வது என்னால் முடியாது, அதே போன்று புஜாரா சாரால் என்னைப் போன்று பேட்டிங் செய்ய முடியாது.

எனவே நான் என்ன செய்கிறேன், இதுவரை நான் என்ன கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து பார்த்து அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆக்ரோஷமான பேட்டிங் தான் என்னுடைய அணுகுமுறை.

அதனை நான் மாற்றம் விரும்பவில்லை இனியும் அதிரடியாக தான் பேட்டிங் செய்வேன். இப்போது எனக்கு ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது.

துலீப் டிராபி போட்டிகள் மற்றும் நான் விளையாடும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அணியில் இழந்த இடத்தை மீட்டெடுக்க கடுமையான முயற்சியில் இறங்கப்போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com