பஞ்சாப் அணிக்காக ஆடியபோது கும்ப்ளேவிடம் அழுதேன்... ராகுலிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன் - கிறிஸ் கெயில்

image courtesy:PTI
ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கிறிஸ் கெயில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை விளையாடினார்.
கயானா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய அதிரடி ஆட்டத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக கெயில் கருதப்படுகிறார்.
தனது ஐ.பி.எல். கெரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடங்கினாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில்தான் அவர் உண்மையிலேயே சாதனை நிறைய படைத்தார். அத்துடன் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒரு புகழ்பெற்ற கூட்டணியை உருவாக்கினார்.
இருப்பினும் அவர் தனது ஐ.பி.எல். கெரியரின் பிற்பகுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறினார். 2018-ம் ஆண்டில் அவர் 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2018 முதல் 2021 வரை அந்த அணிக்காக விளையாடினார். பஞ்சாப் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,339 ரன்கள் எடுத்தார்.
கொரோனா தொற்று காலத்தில் நடத்தப்பட்ட 2021- ஐ.பி.எல். சீசனின் 2-வது பாதியில் அவர் விளையாடவில்லை. அத்துடன் அடுத்த சீசனுக்கு முன்னதாக (2022-ம் ஆண்டு) அவர் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் நிர்வாகம் தம்மை மோசமாக நடத்தியதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கெரியரின் இறுதிக் கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் எதிர்கொண்ட கடினமான காலங்களைப் பற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “எனது ஐ.பி.எல். பயணம் பஞ்சாப் அணியால் முன்கூட்டியே முடிந்துவிட்டது. ஆமாம், நிச்சயமாக, பஞ்சாப் அணியில் எனக்கு அவமரியாதை செய்யப்பட்டது. நான் ஒரு மூத்த வீரராக, லீக்கிற்கு நிறைய பங்களித்து, உரிமையாளருக்கு மிகுந்த மதிப்பு சேர்த்தவன் என்று உணர்ந்தேன். ஆனால், அவர்கள் என்னை அவமரியாதை செய்து, ஒரு குழந்தை போல நடத்தினர். முதல் முறையாக என் வாழ்க்கையில் மனச்சோர்வு நிலையில் இருப்பது போல உணர்ந்தேன்.
மனச்சோர்வு பற்றி மக்கள் பேசும்போது, அதை கொஞ்சம் உணர முடிந்தது, அது எனக்கு பொருந்தவில்லை. நாம் வேலை பற்றி பேசுகிறோம். அந்த நேரத்தில் பணம் தேவையில்லை. உங்கள் மனநலம் பணத்தை விட முக்கியமானது. நான் அனில் கும்ப்ளேவை அழைத்தேன். அவரிடம், ‘கேளுங்கள், நான் வெளியேறுகிறேன்’ என்று கூறினேன், ஏனெனில் அதே நேரத்தில் டி20 உலகக்கோப்பை இருந்தது. நாங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தோம். அதனால் எனது மனநிலை மிகவும் குழப்பமாக இருந்தது.
உண்மையில் அவரிடம் பேசும்போது உடைந்து அழுதேன், ஏனென்றால் நான் மிகவும் காயப்பட்டிருந்தேன். ஏனெனில் அவராலும் பஞ்சாப் அணி நகர்ந்த விதத்தாலும் நான் ஏமாற்றமடைந்தேன். அப்போது கே.எல். ராகுல் கேப்டனாக இருந்தார். அவர் என்னை அழைத்து, ‘கிறிஸ் கொஞ்சம் பொறுங்கள் அடுத்த ஆட்டத்தில் நீ விளையாடுவாய்" என்றார். நான் உங்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு, என் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்” என கூறினார்.






