எங்கு தப்பு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து ஸ்ரேயாஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா தோல்வியை தழுவியது.
எங்கு தப்பு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து ஸ்ரேயாஸ்
Published on

கொல்கத்தா,

அனல் பறக்க நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் ஆன கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சால்ட் 75 ரன்களையும், சுனில் நரைன் 71 ரன்களையும் குவித்தனர்.

இதனையடுத்து 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, சஷாங் சிங் ஆகியோரின் அதிரடியின் மூலம் வெறும் 18.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 108, சஷாங் சிங் 68,பிரப்சிம்ரன் சிங் 54 ரன்களும் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : 260 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள்தான். இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் சுனில் நரைன் மற்றும் சால்ட் ஆகியோர் பேட்டிங் செய்ததை பார்க்க அற்புதமாக இருந்தது.இந்த போட்டியில் 2 அணிகளின் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்துள்ளது வருத்தமாக உள்ளது.

தப்பு எங்கு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற முடிவுகளும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து அதற்கு ஏற்றாற்போன்று தயாராக விரும்புகிறோம். இனிவரும் போட்டிகளில் இதைவிட நல்ல திட்டத்துடன் களத்திற்கு திரும்புவோம். சுனில் நரைன் ஆடுவதை பார்க்க அற்புதமாக இருக்கிறது. அவர் களத்திற்கு செல்லும் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுகிறார். நிச்சயம் அவரது இந்த சிறப்பான பார்மை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com