நான் மிட்செல் ஸ்டார்க் போல வர விரும்பவில்லை - அவேஷ் கான் பேட்டி

Image Courtesy:@IPL
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் ஆட்டநாயகன் விருதை அவேஷ் கான் வென்றார்.
ஜெய்ப்பூர்,
ஐ..பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 74 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், அந்த ஓவரை மிகச்சிறப்பாக வீசிய அவேஷ் கான் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் காரணமாக லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது அவேஷ் கானுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கை நன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் அந்த லேசான காயத்தால் கை உடைந்ததாக நினைத்தேன். அதனால் கடைசி ஓவரில் வென்ற பின் வெற்றியைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நான் மிட்செல் ஸ்டார்க் போல வர விரும்பவில்லை. நல்ல அவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன். எனது நேரத்தை எடுத்து தெளிவுடன் பந்து வீச விரும்பினேன்.
குறிப்பாக யார்க்கர் பந்துகளை வீச விரும்பினேன். எனது செயல்பாடுகளில் கவனத்தை செலுத்த விரும்பினேன். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் பவுண்டரியை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். கடைசி ஓவரில் மில்லர் அந்த கேட்ச்சை பிடித்து விடுவார் என்று நினைத்தேன். அது தவறியதால் கடைசியில் தேவைப்பட்ட 4 ரன்கள் எட்ஜ் வாயிலாக பவுண்டரி செல்லலாம் என்றும் நினைத்தேன்.
எனவே, என் யார்க்கர் பந்துகளை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கடைசி ஓவரில் நேரம் எடுத்து பீல்ட் செட்டிங் செய்தோம். இந்தப் பெரிய தொடரில் இதே போல பவுலிங் செய்து எனது அணியின் வெற்றிகளில் பங்காற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






