

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருந்தார். கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கவுதம் கம்பீர், நடப்பு சீசனில் சற்று தடுமாறுகிறார். பேட்டிங்கிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு போதுமான பங்களிப்பை என்னால் அளிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ள கவுதம் கம்பீர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவது தனிப்பட்ட முடிவு. கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
டெல்லி டேர்வில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஐயர், அணி நிர்வாகத்துக்கும் பயிற்சியாளர்க்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது தனக்கு மிகப்பெரிய கவுரவம் எனவும் தெரிவித்து உள்ளார்.