நான் 3 வருடங்களாக சிங்கிளாக இருக்கிறேன் - வதந்திகளுக்கு சுப்மன் கில் முற்றுப்புள்ளி

image courtesy:PTI
தன்னுடைய மொத்த கவனமும் கிரிக்கெட் விளையாடி சாதிப்பதில் இருப்பதாக சுப்மன் கில் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக போற்றப்பட்டு வருகிறார். அறிமுகம் ஆன குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் துணை கேப்டனாக வளரும் அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். தற்போது நடைபெற்று வரும் 18-வது ஐ.பி.எல். சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதிலும் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
முன்னதாக கடந்த காலங்களில் சுப்மன் கில் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கரை காதலிப்பதாக வதந்திகள் வந்தன. மேலும் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் காதல் செய்வதாகவும் மற்றொரு வதந்தி காணப்படுகிறது.
இந்நிலையில் அவை அனைத்துமே வதந்திகள் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நான் சிங்கிளாக இருந்து வருகிறேன். என்னை வெவ்வேறு நபர்களுடன் தொடர்புப்படுத்தி நிறைய வதந்திகள் மற்றும் யூகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் அபத்தமானது. அது போன்ற நபரை எனது வாழ்நாளில் இன்னும் பார்த்ததில்லை. ஆனால் நான் அந்த குறிப்பிட்ட நபருடன் தொடர்பில் இருக்கிறேன், இவருடன் இருக்கிறேன் என்ற வதந்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
எனது தொழில் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனம் செலுத்துகிறேன் என்பது எனக்கு தெரியும். வருடத்தில் 300 நாட்கள் ஒருவருடன் இருக்க என் வாழ்க்கையில் இடமில்லை. எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னால் ஒருவருடன் நேரத்தை முதலீடு செய்து தொடர்பில் இருக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும்" என்று கூறினார்.






