முழுவதும் பெண்ணாக மாறிவிட்டேன்.. விளையாட விடுங்கள் - இந்திய முன்னாள் வீரரின் மகள் கோரிக்கை


முழுவதும் பெண்ணாக மாறிவிட்டேன்.. விளையாட விடுங்கள் - இந்திய முன்னாள் வீரரின் மகள் கோரிக்கை
x

image courtesy:instagram/anayabangar

தினத்தந்தி 19 Jun 2025 9:40 PM IST (Updated: 19 Jun 2025 9:50 PM IST)
t-max-icont-min-icon

சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறினார்.

மும்பை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதோடு தனது பெயரையும் 'அனயா' என மாற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துது.

அவர் ஆணாக இருந்த சமயத்தில் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரோடு அவர் விளையாடியிருக்கிறார். அவர்களோடு அவர் நட்பிலும் இருக்கிறார்.

அதன்பின் தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முழுமையான பெண்ணாக தான் மாறியதாக அனயா அறிவித்துள்ளார். அதோடு தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ.-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஆண்டு மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஒரு விதியை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அனயா பங்கர் தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதற்கான அறிக்கை இது எனவும், கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆய்வு அறிக்கை தனது கருத்துக்களையோ, அனுமானங்களையோ சொல்லவில்லை. ஆனால், உண்மையான தகவல்களைச் சொல்கிறது எனவும் அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அந்த வீடியோவிற்கு, "நான் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தகுதியானவள் என்று அறிவியல் கூறுகிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், உலகம் உண்மையைக் கேட்கத் தயாராக இருக்கிறதா?" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story