

மும்பை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் பல உலகளாவிய தொடர்களில் இந்திய அணி தற்போது நடப்பு சாம்பியனாக திகழ்கிறது. பெண்கள் உலகக் கோப்பை, ஆண்கள் சாம்பியன்ஸ் டிரோபி, ஆண்கள் டி20 உலகக் கோப்பை, ஆண்கள் யு-19 உலகக் கோப்பை மற்றும் பெண்கள் யு-19 உலகக் கோப்பை ஆகியவற்றில் இந்திய அணிகள் பட்டம் வென்றுள்ளன. இது இந்திய கிரிக்கெட்டின் உலக ஆதிக்கத்தின் தொடக்கமாக இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான டி20 மும்பை லீக் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா இதுகுறித்து பேசினார். அப்போது, “கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிகள் காட்டி வரும் செயல்பாடுகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆண்கள் அணி மட்டுமல்லாமல் பெண்கள் அணியும் உலகக் கோப்பையை வென்றது பெரிய சாதனை,” என்று அவர் கூறினார்.
மேலும், “சமீபத்தில் ஆண்கள் அணி செய்த சாதனை மிகவும் அபாரமானது. இது தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன். இங்கிருந்து பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது. ஒருமுறை அந்த ‘மொமென்டம்’ கிடைத்துவிட்டால் அதை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். அது மிக முக்கியம். தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கும் அந்த ‘மொமென்டம்’ கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.