’என் கனவுகள் அனைத்தும் சிதறிவிட்டதாக நினைத்தேன்..’ - சஞ்சு சாம்சன் உருக்கமான பேட்டி

டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
’என் கனவுகள் அனைத்தும் சிதறிவிட்டதாக நினைத்தேன்..’ - சஞ்சு சாம்சன் உருக்கமான பேட்டி
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அளித்தார். அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் நாயகன் விருதை பெற்ற பின் சஞ்சு சாம்சன் பேசியதாவது;

”இது ஒரு கனவு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் உணர்கிறேன். என் உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தத் தருணத்திற்காகத்தான் நான் நீண்ட காலமாக உழைத்து வந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கான விதை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விழுந்துவிட்டது. கடந்த 2024 உலகக் கோப்பை அணியில் நான் இருந்தும், போட்டிகளில் விளையாடும் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதிருந்தே, நான் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவது போலவும், கோப்பையை வெல்வது போலவும் தொடர்ந்து மனதிற்குள் காட்சிப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நான் சரியாக விளையாடாதபோது, என் மனம் முழுமையாக உடைந்து போனது. என் கனவுகள் அனைத்தும் சிதறிவிட்டதாக நினைத்தேன். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தைரியமாகக் கனவு காண்பதைக் கைவிடக் கூடாது என்பதற்கு நானே சாட்சி. அந்தக் கனவு காண்பதற்கான துணிச்சல் எனக்கு இருந்ததால்தான், இன்று இந்தக் கோப்பை என் கையில் உள்ளது. எனது இக்கட்டான நேரத்தில் முன்னாள் வீரர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு உதவினர். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக நான் சச்சின் டெண்டுல்கர் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். அவரிடம் பலமுறை நீண்ட நேரம் உரையாடினேன். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து ஆலோசனையும், வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதைவிடப் பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com