இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி

image courtesy:twitter/@BCCI
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
சென்னை,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை (50 ஓவர்) இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்ல்லை. இந்நிலையில், இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புவதாக வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது. துபாயில் உள்ள மைதானத்தைப் பார்த்தால், அதில் என்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று தோன்றியது. ஏனெனில் அவை கொஞ்சம் மெதுவாக இருப்பதன் காரணமாக, என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. அதில் என்னுடைய பங்கு என்னவென்றால், ஸ்டம்ப்களுக்கு நேராக பந்துவீசி பேட்டர்களுக்கு சவால் விடுவது மட்டுமே. அதுதான் நான் விக்கெட் எடுக்க ஒரு அடிப்படை காரணம். இவ்வாறு அவர் கூறினார்.






