இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் விளையாட விருபுகிறேன் - இங்கிலாந்து நட்சத்திர வீரர்

image courtesy:ICC
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும் என்பதால் அந்த 2 போட்டிகளும் இந்தியாவுக்கு வாழ்வா -சாவா? போன்றதுதான்.
கடந்த போட்டியின் மூலம் ஏறக்குறைய 4 வருடங்களுக்கு பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரிலும் அவர் முழுமையாக விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து வந்த உடனேயே அவரை அதிக பணிச்சுமைக்கு உட்படுத்த கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதுவதாக தகவல் வெளியாகியது. இதனால் அவர் 2 போட்டிகளிலும் விளையாடுவாரா? அல்லது ஏதேனும் ஒன்றில் மட்டுமா? என்பது தெரியவில்லை.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் விளையாட விரும்புவதாக ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். அவர்கள் (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) அனுமதித்தால் நான் விளையாட தயார். ஏனெனில் இந்த தொடரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. நான் ஏற்கனவே இந்தியா மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புவதாக சொன்னேன். அதில் ஒன்று நிறைவேறிவிட்டது. அடுத்தது ஆஷஸ் தொடர். அந்த தொடருக்கு செல்ல என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று கூறினார்.






