ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன் 'ஈ சாலா கப் நம்து' - ரஜத் படிதார்

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இது மிகவும் சிறப்பானது என்று நினைக்கிறேன். இது அணிக்காக நீண்ட காலம் விளையாடி வரும் விராட் கோலிக்கும், இந்த அணியை நீண்ட காலம் ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானது. இதற்கு இவர்கள் தகுதியானவர்கள். முதல் தகுதி சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றதுமே கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்பினேன். இந்த மைதானத்தில் 190 ரன்கள் நல்ல ரன்கள்தான். ஏனென்றால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது.

எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களை செயல்படுத்திய விதத்தை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் குருனால் பாண்டியாவை பந்து வீச அழைக்கிறேன். அதேபோல சுயாஷ் ஷர்மாவும் தொடர்ந்து எங்களுக்கு சிறப்பாக இருந்தார். மேலும், அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக இருந்தார்கள். குறிப்பாக ரொமாரியோ ஷெப்பர்ட் அவருடைய மூன்று ஓவரில் நல்ல திருப்பு முனைகளை கொடுத்தார்.

இது விராட் கோலியை கேப்டனாக வழி நடத்துவதற்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பு. எனக்கு இது மிகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது. முன்பே சொன்னது போல அவர் எல்லாவற்றுக்கும் தகுதியானவர். விராட் கோலி மற்றும் ரசிகர்கள், மேலும் அணி ஊழியர்கள், அணி நிர்வாகம் என அனைவரும் ஆதரித்த விதம் அழகாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு வரி சொல்கிறேன் 'ஈ சாலா கப் நம்து'. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com