

சென்னை,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், கடந்த 2025-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின்போது தான் சந்தித்த கடுமையான மன உளைச்சல் மற்றும் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரை சொந்த நாட்டில் விளையாடுவது கூடுதல் பொறுப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியதாக ஜெமிமா தெரிவித்துள்ளார்.
"சொந்த நாட்டில் உலகக் கோப்பை நடப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதனால் தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் மனரீதியாக அழுத்தத்தில் இருந்தேன். உலகக் கோப்பை என்றாலே அழுத்தம் அதிகம். அதுவும் சொந்த மண்ணில் என்றால் அது இரட்டிப்பாகிவிடும்," என்று அவர் கூறினார்.
தொடரின் முதல் போட்டியிலேயே சந்தித்த ஏமாற்றம் தனது மனநிலையை கடுமையாக பாதித்ததாக ஜெமிமா தெரிவித்தார்.
"முதல் போட்டியில் நான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தேன். அது என்னை முழுமையாக உடைத்துவிட்டது. அதன் தாக்கம் எனது பீல்டிங்கிலும் தெரிந்தது. வழக்கமாக சுறுசுறுப்பாக செயல்படும் என்னால் இயல்பாக நகரக்கூட முடியவில்லை. சில மிஸ்-பீல்டிங்குகளையும் செய்தேன்," என்றார்.
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான லீக் போட்டியில் ஜெமிமா 33 ரன்கள் அடித்து மீண்டும் தனது பார்முக்கு திரும்பினார்.
"அந்த இன்னிங்ஸ் எனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் அணிக்காக ஏதாவது செய்து வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன்," என்று கூறினார்.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டி நாளின் காலை அவருக்கு கிடைத்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜெமிமா நினைவுகூர்ந்தார்.
"இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவனில் நான் இல்லை. அந்த தருணத்தில் நான் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்துபோனேன்," என தெரிவித்தார்.
இந்த சவால்களையும் ஏமாற்றங்களையும் தாண்டி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் ஜெமிமா. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2025 மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது.