அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால்.. - கருண் நாயர் ஆதங்கம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் இடம்பெறவில்லை.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டார்.

இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். அந்த அணியில் 8 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தொடரின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர் இடம்பெறவில்லை. அவர் மறுபிரவேசம் செய்த இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 4 டெஸ்டில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 205 ரன்களே எடுத்தார். தனது மறுபிரவேச வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத 33 வயது கருண் நாயருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து கருண் நாயர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அனேகமாக இந்த கேள்வியை நீங்கள் இந்திய தேர்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

இந்திய அணி கடைசியாக விளையாடிய டெஸ்டில் (இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவலில் நடந்தது) நான் அரைசதம் அடித்தேன். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்த ஒரே இந்திய வீரர் நான்தான். அந்த வகையில் நான் அணிக்கு கணிசமான பங்களிப்பை அளித்தேன். நாம் வெற்றியும் பெற்றோம். ஆனால் அணித்தேர்வுக்கு இது போன்ற விஷயங்கள் பொருட்டல்ல என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com