மன்னிப்பேன்; மறக்க மாட்டேன் - ஹர்பஜன் மீது ஸ்ரீசாந்த் மீண்டும் காட்டம்

ஹர்பஜன் சிங் குறித்து காட்டமான கருத்துகளை ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்
மன்னிப்பேன்; மறக்க மாட்டேன் - ஹர்பஜன் மீது  ஸ்ரீசாந்த் மீண்டும் காட்டம்
Published on

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகமான முதல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்துக்கும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லை மீறிய கோபத்தில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். இதனால் ஸ்ரீசாந்த் அழுத காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களையே கலங்க வைத்தது. இதனையடுத்து அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின், இருவரும் சமாதானமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் குறித்து காட்டமான கருத்துகளை ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஸ்ரீசாந்த் இது குறித்து கூறியிருப்பதாவது; அந்த சம்பவத்தை (கன்னத்தில் அறைந்த) வைத்து ஒரு விளம்பரத்தில் ஹர்பஜன் சமீபத்தில் நடித்தார். சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அதன் மூலம் சம்பாதித்தார். அந்த விளம்பரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிடுமாறு என்னை தொந்தரவு செய்தார்.

நான் அவரிடம், 'நான் மன்னிப்பேன், ஆனால் ஒருபோதும் மறக்க மாட்டேன்' என்று சொன்னேன். யாராவது உங்களுக்குத் துரோகம் செய்தால், அவர்களை மன்னிக்க வேண்டும், ஆனால் அதை மறக்கக் கூடாது. நீங்கள் மறந்துவிட்டால், அவர்கள் மீண்டும் அதையே செய்வார்கள். அவரே அதற்கு மிகப்பெரிய உதாரணம். நான் அவரை மன்னித்திருக்கலாம், ஆனால் அவர் செய்த துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன். ஹர்பஜன் சிங்கை சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் நான் பிளாக் செய்து விட்டேன். அந்த நபருடன் இனி எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com