நிர்வாணமாக வலம் வருவேன்: ஹைடனின் சவாலும்.. அவருடைய மகளின் வேண்டுகோளும்... இணையத்தில் வைரல்

image courtesy:PTI
ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுவரை சதம் அடித்ததில்லை.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 21-ம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த தொடர் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடரை வெல்வது மிகவும் முக்கியம் என்று இருநாட்டு ரசிகர்களும் கருதுவது வழக்கம். அதனால் இந்த தொடரில் அனல் பறக்கும். வீரர்களும் மாறி மாறி ஆக்ரோஷத்துடன் மோதுவதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தற்போது அட்டகாசமான பார்மில் விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் கண்டதில்லை. அங்கு 14 டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்கும் அவர் 892 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதில் 9 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில் எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சவால் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அவருடைய மகள் கிரேஸ் இன்ஸ்டாகிராம் மூலம் ஜோ ரூட்டை டேக் செய்து, “என்னுடைய தந்தையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விடாதீர்கள். தயவு செய்து சதம் அடித்து விடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.






