சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி

அறிமுக ஒருநாள் போட்டியிலேயே இவரது பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.
இருப்பினும் அறிமுக போட்டியிலேயே அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். கிரிக்கெட் விதிப்படி, பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து 31 வயதான சுப்ராயன் கடந்த மாதம் 26-ம் தேதி அன்று பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்தினார். சோதனை முடிவில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்துவீசுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கியுள்ளது.






