டி20 கிரிக்கெட்: தாமதமாக பந்துவீசினால்..? புதிய விதிமுறையை அறிமுகப்படுத்திய ஐ.சி.சி.

சர்வதேச டி20 போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2.30 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ள ஐ.சி.சி. அனுமதி வழங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20-வது ஓவரை வீசத் தொடங்கியிருக்க வேண்டும்.

இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலசமயங்களில் 20 ஓவர்களை முடிக்கக் கூடுதல் நேரத்தை அணிகள் எடுத்துக்கொள்கின்றன.

இந்நிலையில் இதைத் தடுக்கும் விதமாக புதிய விதிமுறையை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இனி தாமதமாக பந்துவீசினால், கடைசி ஓவரில் உள்வட்டத்திற்குள் ஒரு பீல்டரை நிறுத்த வேண்டும்

அதாவது 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், மீதமுள்ள ஓவர்களின்போது 30 கெஜம் வட்டத்துக்கு வெளியே நிற்கும் வீரர்களில் ஒருவரை அணிகள் குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக 18-வது ஓவர் தொடங்கும்போதே பந்துவீசும் அணி 90 நிமிடங்களைக் கடந்துவிட்டால் மீதமுள்ள இரு ஓவர்களிலும் 30 கெஜம் வட்டத்துக்கு வெளியே ஒரு பீல்டர் குறைவாக பீல்டிங் செய்யவேண்டும்.

இதன் காரணமாகப் பந்துவீசும் அணிக்கு பாதிப்பு ஏற்படும். கடைசி ஓவர்களில் எதிரணி அதிக ரன்களை எடுக்கும். அதனால் 20 ஓவர்களைக் குறித்த நேரத்துக்குள் முடிக்க அணிகள் முற்படும். இக்காரணங்களால் இந்தப் புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஹண்ட்ரெட் போட்டியில் இந்த விதிமுறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதால் ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச டி20 ஆட்டத்திலும் அறிமுகமாகிறது.

இதன்படி ஜன.16ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் - அயர்லாந்து ஆடவர் போட்டி மற்றும் ஜன.18ஆம் தேதி தென்னாப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் மகளிர் போட்டிகளில் இந்த விதிகள் அறிமுகமாக உள்ளது.

மேலும் சர்வதேச டி20 போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2.30 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ளவும் ஐ.சி.சி. அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com