ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: இலங்கை வீரர் முதலிடம்

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்,
இந்தியா - இங்கிலாந்து, இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் (50 ஓவர்) தொடர்கள் நிறைவடைந்துள்ளன. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் தீக்ஷனா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இவர் ஏற்றம் கண்டுள்ளார். முதலிடத்தில் இருந்த ரஷித் கான் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். நமீபியா வீரர் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 3-வது இடத்தில் தொடருகிறார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்திலும், முகமது சிராஜ் 10-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தின் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. முகமது நபி முதலிடத்தில் தொடருகிறார்.






