ஐ.சி.சி. ஒருநாள் தொடர்கள்: அரிய சாதனை நிகழ்த்திய ரச்சின் ரவீந்திரா

image courtesy: PTI
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் ரச்சின் சதம் அடித்து அசத்தினார்.
லாகூர்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்டெ்டுக்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 100 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
நியூசிலாந்து இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு இது 5-வது ஒருநாள் சதமாகும். இந்த 5 சதங்களையும் இவர் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில்தான் அடித்துள்ளார். இதன் மூலம் தனது முதல் 5 ஒருநாள் சதங்களையும் ஐ.சி.சி. தொடர்களில் அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை ரச்சின் ரவீந்திரா நிகழ்த்தியுள்ளார்.
மேலும் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரச்சின் ரவீந்திரா (13 இனிங்ஸ்கள்) படைத்துள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் 15 இன்னிங்ஸ்களில் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






