ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்

image courtesy:PTI
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தடுமாறி வரும் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ரிஷப் பண்ட் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடம் வகிக்கிறார். இந்திய கேப்டன் சுப்மன் கில் 9-வது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் பும்ரா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ரபடா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 'நம்பர் 1' ஆக வலம் வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் சதம் விளாசிய இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 8 இடங்கள் எகிறி 13-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.






