மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம்
Published on

டெர்பி,

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்னும் ஒரு லீக் சுற்று எஞ்சியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா (10 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் எஞ்சிய ஓர் அரை இறுதி இடத்தை நிர்ணயிக்கும் வாழ்வா-சாவா? ஆட்டத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டி டெர்பி நகரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் (109), வேதா (70) ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்துக்கு 266 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதன்பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 25.3 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com