இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் அவர்... - சுனில் கவாஸ்கர் கருத்து


இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் அவர்... - சுனில் கவாஸ்கர் கருத்து
x

கிரிக்கெட்டில் யாருமே இன்றியமையாதவர் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ( 5 போட்டிகள்) இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறிப்பிட்ட 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடினார். பணிச்சுமையை காரணம் காட்டி 2 டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக விளையாட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “கிரிக்கெட்டில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல. அதனால்தான் ஜஸ்பிரித் பும்ரா எப்போது விளையாட வேண்டும் என்பதை தேர்வாளர்கள் முடிவு செய்வது மிகவும் முக்கியமானது. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியது குறித்து ஏற்கனவே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. நியாயமாகச் சொன்னால், ஐந்து போட்டிகளில் 3 டெஸ்டில் மட்டுமே விளையாட முடியும் என்று அவர் தேர்வுக் குழுவிடம் முன்பாகவே தெரிவித்திருந்தார்.

ஆனால் கடைசி டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர் விளையாடியிருக்க வேண்டும் என்பதுதான் சற்று சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்த டெஸ்ட் போட்டி அக்டோபர் தொடக்கத்தில் இருந்தது. எனவே அவர் ஓய்வெடுத்து சரியான நேரத்தில் குணமடைய இரண்டு மாதங்கள் இருந்தன. அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் கூறியது.

இங்குதான் தனிநபருக்கு எது நல்லது, இந்திய கிரிக்கெட்டுக்கு எது நல்லது என்பதற்கு இடையிலான கோடுகள் கொஞ்சம் மங்கலாகிவிட்டன. அந்த கட்டத்தில் அவர் உடல் தகுதியுடன் இருந்திருந்தால், இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக, அவர் விளையாடி இருக்க வேண்டும். அது அவரது முடிவா அல்லது நிர்வாகம் விளையாட வேண்டாம் என்று முடிவு எடுத்ததா என்பது தெரியவில்லை. ஆனால் இறுதியில் இந்தியாவின் வெற்றி கிரிக்கெட்டில் யாருமே இன்றியமையாதவர் கிடையாது என்பதைக் காட்டியுள்ளது. இந்த விளையாட்டு யார் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது

அதைவிட முக்கியமானது என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறுவதா அல்லது எந்த தொடர்பும் இல்லாத சில இருதரப்பு வெள்ளை பந்து விளையாட்டுகளில் விளையாடுவதா? இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் ஜஸ்பிரித் பும்ரா, அக்டோபர் தொடக்கத்தில் இருந்து நவம்பர் பிற்பகுதி வரை உள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும்.

அணிகளைத் தேர்ந்தெடுப்பதில் தேர்வுக் குழு சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது. இது குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டியுள்ளது, அதற்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும். ஆனால் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது அணி நிர்வாகத்தின் கையில் இருக்கிறது. அது அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

1 More update

Next Story