

கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன.
இதனிடையே, நமீபியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அபிஷேக் சர்மா அந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அஹா இன்று கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சல்மான் அலி, நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா களமிறங்கி ஆடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். அபிஷேக் சர்மா மிகச்சிறந்த வீரர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாட நாங்கள் விரும்புகிறோம். உடல்நலம் முன்னேறி அவர் நாளை நடைபெறும் ஆட்டத்தில் விளையாடுவார் என நான் நம்புகிறேன்’ என்றார்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சூர்யகுமார், அபிஷேக் சர்மா நாளைய ஆட்டத்தில் விளையாடவேண்டுமென பாகிஸ்தான் விரும்பினால் அவர் நிச்சயம் விளையாடுவார்’ என்றார்.