வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை - செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
image courtesy: BCCI twitter
image courtesy: BCCI twitter
Published on

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 101 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 3-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ரன்களுக்கு ஷர்த்துல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சிறிது நேரம் தாக்கு பிடித்த ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 76 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த நிலையில் செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வியை தழுவிய பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். ஆனால் பந்துவீச்சுக்கு உகந்த சூழலை கச்சிதமாக பயன்படுத்த தவறி விட்டோம். 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதில் விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது. ஆனால் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு அணியாக கூட்டு முயற்சி தேவை. அதை செய்யவில்லை.

வெவ்வேறு நேரங்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர். இங்குள்ள சூழலுக்கு தக்கபடி எங்களை மாற்றிக்கொள்வதில் மெச்சும்படி இல்லை. தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த டெஸ்டுக்கு தயாராக வேண்டியது அவசியம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com