இந்தியாவுக்கு எதிராக அப்படி விளையாடினால் எளிதில்... - பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்


இந்தியாவுக்கு எதிராக அப்படி விளையாடினால் எளிதில்... - பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
x

image courtesy: AFP

தினத்தந்தி 14 Feb 2025 8:23 PM IST (Updated: 14 Feb 2025 8:27 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

லாகூர்,

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியை சாதாரண அணியாக நினைத்துக் கொண்டு விளையாடினாலே வெற்றி பெறலாம் என்று முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிராக அழுத்தமின்றி விளையாடினால் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை தக்க வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் அது ஸ்பெஷல் போட்டியாக இருக்கிறது. ஏனெனில் அதைச்சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும் அழுத்தமும் உருவாகின்றன. ஆனால் வீரர்களாக நீங்கள் மிகவும் அமைதியாக இருந்து, சத்தங்களை தடுத்து, ஆஸ்திரேலியா அல்லது மற்ற ஏதேனும் அணிக்கு எதிராக விளையாடுவது போல் சாதாரணமாக விளையாட வேண்டும். இம்முறை பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அவர்களிடம் வலுவான அணி இருக்கிறது. கடந்த சாம்பியன்ஸ் தொடரில் விளையாடிய சில வீரர்கள் இப்போதும் விளையாடுகிறார்கள். குறிப்பாக பாபர் அசாம் பற்றி நாம் பேசுகிறோம். கடந்த முறையை விட தற்போது அவர் முதிர்ச்சியைக் கொண்ட டாமினேட் செய்யக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு அவரைப் போலவே பகார் ஜாமான் போன்ற வீரர்களின் பேட்டிங்கும் முக்கியமாகும்.

அதே போல பந்து வீச்சுத் துறையில் ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் புத்திசாலித்தனமாக நன்றாக விளையாடி வருகிறார்கள். கேப்டன் முகமது ரிஸ்வான் தற்போது விக்கெட் கீப்பராக இருக்கிறார். நான் கடந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடினான் வெற்றிகரமாக செயல்பட்டேன்" என்று கூறினார்.


Next Story