தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதில் நான் கவனம் செலுத்த போவதில்லை - ஜோ ரூட்

image courtesy:ICC
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட். அவர் நேற்று முன்தினம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ரிக்கி பாண்டிங்கை முந்தினார். இந்த பட்டியலில் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் (200 டெஸ்ட்) முதல் இடத்திலும், ஜோரூட் 13,409 ரன்னுடன் (157 போட்டி) 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க முடியுமா? என்பதற்கு ஜோ ரூட் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் தெண்டுல்கர். அவர் சாதித்த அனைத்து விஷயங்களும் நம்ப முடியாதவை. நான் பிறப்பதற்கு முன்பே அவர் டெஸ்டில் அறிமுகமானார். சிறு வயதில் இருந்தே அவரது ஆட்டத்தை பார்த்து பின்பற்றி வருகிறேன். அவருக்கு எதிராக ஒரு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றது சிறந்ததாகும்.
அவர் பேட்டிங் செய்ய வரும்போது முழு ரசிகர்கள் கூட்டமும் ஆராவரம் செய்தது. அதை பார்ப்பது வினோதமாக இருந்தது. தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதில் நான் கவனம் செலுத்த போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 2,512 ரன்கள் தேவைப்படுகிறது. தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். ஜோ ரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.






