

மும்பை,
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இந்தியாவில் நிலவும் கடும் கோடை வெயிலை கருத்தில்கொண்டு, தொடரை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடைகால வெப்பம் காரணமாக வீரர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு மற்றும் போட்டிகளின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 94 ஆக உயர்த்தும் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார். தற்போது தொடரின் கால அட்டவணையை மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், ஒருவேளை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அது ஒளிபரப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி பண்டிகை காலத்தில் விளம்பரதாரர்களுக்கு அதிக வரவேற்பும் வணிக வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.