இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வெற்றிக்கான ஸ்கோர் எது என்று தெரிவதில்லை - ருதுராஜ் கெய்க்வாட்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Image Courtesy: X (Twitter)
Image Courtesy: X (Twitter)
Published on

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்னும், டேரில் மிட்செல் 52 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நன்றாக உணர்கிறேன். ஈரப்பதமான சூழ்நிலைகளில் 70+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நல்ல செயல்பாடு.

டாஸ் கிடைக்காதது ஆசீர்வாதமாக அமைந்தது. சதத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. 220+ ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும் கடைசி நேரத்தில் 4 - 5 ஷாட்டுகளை தவற விட்டது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இன்னிங்ஸ் இடைவெளியின் போது அது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துமோ என்று நினைத்து அப்செட்டானேன். நல்லவேளையாக இந்த இலக்கே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.

கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்தோம். ஆனால் இப்போட்டியில் எங்கள் பீல்டிங் நன்றாக இருந்தது. இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வெற்றிக்கான ஸ்கோர் எது என்று தெரிவதில்லை. எனவே எப்போதும் நீங்கள் 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க வேண்டும். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தால் எதிரணியை பின்னோக்கி நடக்க வைக்கலாம். இன்று அதை செய்த தேஷ்பாண்டேவின் கடின உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது.

அதே போல ஈரப்பதமான சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல முடியாது. எனவே நீங்கள் இருக்கையின் பின்னாடி அமர்ந்து கொண்டு அவர்களது வேலையை செய்ய விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com