

மும்பை,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில், மும்பை-ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 114 ரன்களும், ரெயில்வே 266 ரன்களும் எடுத்தன. 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 2-வது இன்னிங்சில் 63 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 65 ரன்கள் எடுத்தார். அனுபவ வீரர் ரஹானே முதல் இன்னிங்ஸ் போலவே இந்த இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் (8 ரன்) சொதப்பினார். ரெயில்வே வேகப்பந்து வீச்சாளர் ஹிமான்ஷூ சாங்வான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 47 ரன்கள் இலக்கை ரெயில்வே அணி 11.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு 7 புள்ளியையும் தட்டிச் சென்றது. 41 முறை சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை அணியின் வீழ்ச்சி நடப்பு சீசனில் மிகப்பெரிய தோல்வியாகும்.
ரெயில்வே பயிற்சியாளர் ஹர்விந்தர் சிங் கூறுகையில், ரஞ்சி வரலாற்றில் முதல்முறையாக நாங்கள் மும்பை அணியை தோற்கடித்து இருக்கிறோம். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எல்லா பெருமையும் வீரர்களையே சாரும். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி விட்டனர். என்றார்.
தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் (பி பிரிவு) இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 333 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
184 ரன்கள் பின்தங்கிய தமிழக அணிக்கு 2-வது இன்னிங்சில் கங்காஸ்ரீதர் ராஜூ (15 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், விக்கெட் கீப்பர் ஜெகதீசனும், ஜே.கவுசிக்கும் நிதானமாக விளையாடி கைகொடுத்தனர். முக்கியமான கட்டத்தில் ஜெகதீசன் 54 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி 10 நிமிடங்களில் ஹரி நிஷாந்த் (23 ரன்), சாய் கிஷோர் (0) அடுத்தடுத்து வெளியேற தமிழக அணிக்கு சிக்கல் உருவானது. 3-வது நாள் நிறைவில் தமிழக அணி 67 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. ஜே.கவுசிக் (66 ரன்), கேப்டன் பாபா அபராஜித் (0) களத்தில் உள்ளனர்.
கைவசம் 6 விக்கெட் மட்டுமே வைத்துள்ள தமிழக அணி இன்னும் 7 ரன் பின்தங்கி தான் இருக்கிறது. எனவே போட்டியை டிரா செய்ய கடைசி நாளான இன்று தமிழக வீரர்கள் கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
டெல்லியில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான (ஏ பிரிவு) ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பாலோ-ஆன் ஆன ஐதராபாத் அணி 215 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 3-வது நாளான நேற்று அந்த அணி கேப்டன் தன்மய் அகர்வாலின் (103 ரன்) சதத்தின் உதவியுடன் 298 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெல்லி வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும், சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 84 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து வெற்றியின் விளிம்பில் உள்ளது.