திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி போராடி தோல்வி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி போராடி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி போராடி தோல்வி
Published on

நத்தம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி போராடி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சும், மதுரை சூப்பர் ஜெயன்டும் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் டாஸ் ஜெயித்த மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபா இந்த்ராஜித் 70 ரன்களும் (37 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), பரத் சங்கர் 53 ரன்களும் (47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) நிலேஷ் சுப்பிரமணியன் 35 ரன்களும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி மதுரை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் அருண் கார்த்திக்கும், ஷிஜித் சந்திரனும் துரித ரன்வேட்டையில் கவனம் செலுத்தினர். குறிப்பாக அருண்கார்த்திக், திருச்சியின் பந்து வீச்சை பஞ்சராக்கினார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் (8.3 ஓவர்) சேர்த்தனர். சந்திரன் 23 ரன்னில் கேட்ச் ஆனார்.

10 ஓவர்களில் மதுரை அணி 105 ரன்கள் திரட்டி மலைக்க வைத்தது. இந்த சூழலில் 11வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அகில் ஸ்ரீநாத், கேப்டன் அருண் கார்த்திக் (79 ரன், 34 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), அடுத்து வந்த ஷாருக்கான் (2 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்ததால் சிக்கல் உருவானது.

இதன் பின்னர் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மதுரை அணியின் ரன்வேகத்தை மட்டும் எதிரணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதி கட்டத்தில் விக்னேஷ், அணியை தூக்கி நிறுத்தினார்.

கடைசி ஓவரில் மதுரை அணியின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருந்தன. பரபரப்பான 20வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் கவுசிக் முதல் பந்தில் பொய்யாமொழியை (1 ரன்) பதம் பார்த்தார். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் சந்திரசேகர் (0) ரன்அவுட் ஆக, திருச்சி அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. மதுரை அணி 19.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. விக்னேசின் (38 ரன், 22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) போராட்டம் வீண் ஆனது.

3வது ஆட்டத்தில் ஆடிய திருச்சி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மதுரைக்கு 3வது தோல்வியாகும். கடந்த சீசனிலும் மதுரை அணி ஒரு வெற்றியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com