‘தென்ஆப்பிரிக்க மண்ணில் பேட் செய்வது எளிதல்ல’- ரோகித்

தென்ஆப்பிரிக்க தொடர் குறித்து இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டி.
‘தென்ஆப்பிரிக்க மண்ணில் பேட் செய்வது எளிதல்ல’- ரோகித்
Published on

தென்ஆப்பிரிக்கா,

தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பேட்டிங் செய்து ரன்கள் குவிப்பது எளிதான காரியம் அல்ல. இந்தியா மட்டுமல்ல, எல்லா அணிகளுமே பவுன்சும், வேகமும் கூடிய ஆடுகளங்களில் ரன்கள் எடுக்க தடுமாறத்தான் செய்கின்றன. கிரிக்கெட்டில் இயல்பாகவே உள்ள விஷயம் இது. ஆஷஸ் தொடரில், அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் கூட ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களை தவிர மற்றவர்கள் தடுமாறியதை பார்க்க முடிந்தது. இத்தகைய சவாலான ஆடுகளங்களிலும், சீதோஷ்ண நிலையிலும் தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். ஒரு அணியாக சோபிக்க தவறினால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்பாக கடினமான ஆடுகளங்களில் விளையாட விரும்புவதாக சொன்னோம். அதற்கு ஏற்ப கொல்கத்தா ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. அந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடாவிட்டாலும், நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டோம். இது தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயாராவதற்கு உதவிகரமாக இருந்தது.

நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நம்புகிறோம். 5-6 பவுலர்கள் சில ஆண்டுகளாக ஒன்றிணைந்து விளையாடி வருகிறார்கள். இதுவும் நமது அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு ஒரு காரணமாகும்.

இந்த ஆண்டில் நமது அணி ஒரு டெஸ்டில் மட்டுமே தோற்று இருக்கிறது. பவுலர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கு (தென்ஆப்பிரிக்கா) சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியாது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com