

புதுச்சேரி,
இந்தியா ‘ஏ’ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி.
இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் ஓவன் 10 ரன்களிலும், சாம் கான்ஸ்டாஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் பிலிப்பியும் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நாதன் மெக்ஸ்வீனி சிறப்பாக பேட்டிங் செய்தார். நிதானமாக விளையாடிய அவர் சதம் விளாசினார். மெக்ஸ்வீனி 135 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி சரிவிலிருந்து மீண்டது.
மெக்ஸ்வீனிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் கேப்டன் வில் சதர்லேண்ட் அதிரடியாக விளையாடினார். அவர் 68 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.
இறுதியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சூர்யன்ஷ் ஷெட்கே 4 விக்கெட்டுகளும் யாஷ் தாக்குர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 275 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களமிறங்க உள்ளது.