பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்...!

இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

மிர்புர்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் 114 ரன்களில் வங்காளதேசத்தை கட்டுப்படுத்திய இந்திய அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் இந்திய அணி 82 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச பெண்கள் அணி ஆடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தானா, ஷதி ராணி ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷமிமா சுல்தானா, ஷதி ராணி இருவரும் தலா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய முர்ஷிதா காதுன் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து கேப்டன் நிகர் சுல்தானா, ரிது மோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிகர் சுலதானா ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ரிது மோனி 4 ரன், அடுத்து களம் இறங்கிய ஷோர்னா அக்டர் 7 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com