

கொல்கத்தா,
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்-இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 59 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அணியின் ஸ்கோர் 308 ரன்களாக உயர்ந்த போது, கேப்டன் கோலி (136 ரன், 194 பந்து, 18 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் எபாதத் ஹூசைன் சற்று ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை லெக்சைடில் தட்டி விட்ட போது, பைன்லெக் திசையில் தைஜூல் இஸ்லாம் பாய்ந்து விழுந்து பிரமாதமாக பிடித்தார்.
மகிழ்ச்சியை கொண்டாடிய பவுலர் எபாதத் ஹூசைன், தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்தார். கோலி அதை கண்டுகொள்ளாமல் சிரித்த முகத்தோடு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து பின்வரிசை வீரர்கள் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்களுடன் (70 பந்து, 10 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்த இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வங்காளதேச அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 89 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதிலும் காயத்தால் அவதிப்படும் மக்முதுல்லா மீண்டும் களம் காணுவது சந்தேகம் தான். எனவே இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இன்றைய 3-வது நாளில் ஆட்டம் முதல் பகுதியிலேயே முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன்ஷிப்பில் அதிக சதங்கள்: பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார், கோலி