இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட்: மழை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடக்கம்


உணவு இடைவேளைக்கு பின் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 2 ரன்களிலும், கே.எல். ராகுல் 14 ரன்களிலும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடி சேர்ந்து அணியை காப்பாற்றும் நோக்கில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் உணவு இடைவேளைக்கு பின் போட்டியை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட நிலையில் மழை காரணமாக ஏறக்குறைய 2 மணி நேரங்கள் நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. சுப்மன் கில் - சாய் சுதர்சன் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்துள்ளனர்.

1 More update

Next Story