இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வெற்றி பெறப்போகும் அணி இதுதான்- டேல் ஸ்டெயின் கணிப்பு

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.
இந்த தொடரில் இந்திய அணி இளம் வீரரான சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளதால் அவரின் கேப்டன்சி செயல்பாடுகள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஓய்வுக்குப்பின் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் இது கவனம் பெற்றுள்ளது.
மறுபுறம் சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவரது கணிப்பின் படி, இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.






