

சென்னை,
சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது 'டூ ஆர் டை' நிலையில் உள்ளது. அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது. இதையொட்டி இரு தினங்களாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கம்பீரமாக சூப்பர் 8-க்குள் நுழைந்த இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 188 ரன் இலக்கை நோக்கி ஆடி 111 ரன்னில் சுருண்டது. அதுவும் ஆடுகளத் தன்மை மற்றும் சூழலுக்கு தகுந்தபடி ஆடாமல் அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை தாரை வார்த்து விட்டனர்.
அதிரடியாக பேட்டிங் செய்வதோடு, சுழலிலும் கைகொடுக்கும் துணை கேப்டன் அக்ஷர் பட்டேலை வெளியே உட்கார வைத்தது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. இதனால் இன்றைய ஆட் டத்தில் அக்ஷர் பட்டேல் இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. இதே போல் 4 ஆட்டத்தில் 15 ரன் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட் டக்காரர் அபிஷேக் ஷர்மா, களம் இறங்கிய உடனே தடாலடியாக மட்டையை சுழட்டுவதை தவிர்த்து நிலைத்து நின்று ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
திலக் வர்மாவும் (5 ஆட்டத்தில் 107 ரன்) கணிசமாக ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங் கடந்த ஆட்டத்தில் கட்டுக் கோப்புடன் பந்து வீசி கவனத்தை ஈர்த்தனர்.
ஆனால் பிரதான சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இதுவரை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஓவர் களில் 47 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். ஆனால், இது அவரது சொந்த ஊர் மைதானம் என்பதால் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
ஜிம்பாப்வே அணி லீக் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா, இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து சூப்பர் 8 சுற்றை எட்டியது. சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 254 ரன் களை வாரி வழங்கிய ஜிம்பாப்வே, அதை நெருங்க கூட முடியாமல் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே அணியும் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டும். அந்த அணியில் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முஜ ரபானி (11 விக்கெட்), பிராட் இவான்ஸ் (9 விக்கெட்). பேட்டிங்கில் பிரையன் பென்னட் (2 அரைசதத்துடன் 180 ரன்) ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே ஜிம்பாப்வே எந்த அளவுக்கு குடைச்சல் கொடுக்கும் என்பது தெரியும்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்குநேர் மோதி உள்ளன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா: இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங் அல்லது வாஷிங்டன் சுந்தர் அல் லது குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா.
ஜிம்பாப்வே: மருமானி, பிரையன் பென்னட், டியான் மையர்ஸ், ரையான் பர்ல், சிகந்தர் ராசா (கேப்டன்), டோனி முன்யோங்கா, முசெகிவா அல் லது மசகட்சா அல்லது பென் கர்ரன், பிராட் இவான்ஸ், கிரீமர், முஜர பானி, ரிச்சர்ட் நரவா.