2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினர்
2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

ராய்ப்பூர்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்த இருவரும் சதம் விளாசினர். கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அந்த அணியின் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com