

தர்மசாலா,
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். அதை மனதில் கொண்டே இந்திய லெவன் அணியின் தேர்வு இருக்கும். கடந்த மாதம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களே பெரும்பாலும் இந்த தொடரிலும் நீடிக்கிறார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரில் 3 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். முழங்கையை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஏற்கனவே கழற்றி விடப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிடில் வரிசையில் மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிட்டும். டோனி ஒதுங்கி இருப்பதால் ரிஷாப் பண்டின் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு ஆபத்து இல்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் வலுவாக உள்ள இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வம் காட்டுகிறது.
பந்து வீச்சில் காஜிசோ ரபடா, பெலக்வாயோ ஆகியோர் அச்சுறுத்தக்கூடியவர்கள். தொடர்ச்சியாக நான்கு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றியுள்ள தென்ஆப்பிரிக்க அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடர்வதில் முனைப்பு காட்டி வருகிறது.
தென்ஆப்பிரிக்க வீரர் மில்லர் கூறுகையில், குயின்டான் டி காக் பல ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். அவரது கிரிக்கெட் அறிவு வியப்புக்குரியது. அவருடன் இணைந்து ஆடுவது சிறப்பான விஷயம். புதிய கேப்டன், புதிய வீரர்கள் மற்றும் நிறைய இளம் வீரர்கள் நினைத்தாலே பரவசமூட்டுகிறது. கேப்டனுக்கு நான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன். அவர் என்னிடம் இருந்து எந்த மாதிரியான பங்களிப்பை விரும்புகிறாரோ அதை செய்வேன்.