

ஆமதாபாத்,
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் 'சூப்பர்' சுற்றுக்கு முன்னேறின. 'சூப்பர்' சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப்1-ல் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணியும், குரூப்2-ல் இங்கிலாந்து. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணியும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டி தொடரில் தற்போது 'சூப்பர்8' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 21 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்ததில் இந்தியா 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), குயின்டான் டி காக், ரையான் ரிக் கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார் பின் பாஷ், மார்கோ யான்சென், ககிசோ ரபடா அல்லது அன்ரிச் நோர் டியா, கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி.