

சிட்னி,
ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, டி20போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இரு அணி வீரர்களும் பயோ-பபுள் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால், அணியின் குழுவைத் தவிர வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி கொரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப் பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மன் கில் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக புத்தாண்டு தினத்தையொட்டி இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், பிரித்வி ஷா, நவ்தீப் ஷைனி, சுப்மன் கில் ஆகிய 5 பேர் பயோ பபுள் சூழலை மீறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடினர் . அப்போது அங்கு வந்த இந்திய ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து செல்பி எடுத்துச் சென்றார். அந்தப் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய வீரர்களான ரோகித் சர்மா, பிரித்வி ஷா, சுப்மன் கில், நவ்தீப் ஷைனி, ரிஷப் பந்த் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.