சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
துபாய்,
Live Updates
- 9 March 2025 9:59 PM IST
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடியில் பட்டையை கிளப்பினார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி அசத்தியது. கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரோகித் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் 48 ரன்களிலும், அக்சர் படேல் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி (34 ரன்கள்) அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் ஜடேஜா பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார். முடிவில் 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்த இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டி சென்றது. நியூசிலாந்து தரப்பில் மிச்செல் சாண்ட்னர், பிரெஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- 9 March 2025 9:03 PM IST
ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை சாண்ட்னர் வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திரா அற்புதமாக கேட்ச் பிடித்தார்.























