இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி
Published on

கொரோனா பிரச்சினையில் 8 வீரர்களுக்கு இடமில்லை

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டம் முந்தைய நாள் இரவே நடந்திருக்க வேண்டியது. இந்திய ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடந்தது. குருணல் பாண்ட்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, யுஸ்வேந்திர சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை.எஞ்சியிருந்த 11 வீரர்கள் அப்படியே இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத்படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா ஆகிய அறிமுக வீரர்களும் அடங்குவர். இலங்கை அணியில் காயம் காரணமாக சாரித்

அசலங்கா நீக்கப்பட்டார். டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

133 ரன்கள் இலக்கு

இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவானும், புதுமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். ருதுராஜ் 21 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்ஜெயாவும், ஹசரங்காவும் கடும் நெருக்கடி கொடுத்தனர். சுழலில் இந்திய வீரர்கள் தடுமாற ரன்வேகமும் குறைந்தது. ஷிகர் தவான் (40 ரன், 42 பந்து, 5 பவுண்டரி), அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் (29 ரன்) இருவரும் ஒரே மாதிரி சுழற்பந்து வீச்சில் முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனார்கள். சஞ்சு சாம்சன் (7 ரன்), நிதிஷ் ராணாவும் (9 ரன்) சோபிக்கவில்லை.20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட்டுக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

புவனேஷ்வர்குமார் (13 ரன்), நவ்தீப் சைனி (1 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட போது, 4-வது பந்திலேயே எட்டிப்பிடித்தனர். இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருந்தது. 3 அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இல்லாவிட்டால் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியிருக்கும். இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய தனஞ்ஜெயா டி சில்வா 40 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com